உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11முதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி

ஆலோசகர் என்பது ஒரு காலாவதியான விஷயமல்ல...

கல்லூரியில், இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்து வெளியேறி, பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு, தங்களுக்கான ஒரு தகுந்த ஒரு ஆலோசகர் பற்றிய முக்கியத்துவம் புரிவதில்லை. பொதுவாக, அலுவலகப் பணிகளிலோ அல்லது பிற விஷயங்களிலோ வெற்றிபெறும் பெரும்பாலானோர், தங்களுக்கான ஒரு சிறந்த ஆலோசகரைப் பெற்றிருப்பார்கள்.

ஒரு முறையான ஆலோசகரைப் பெறுவதற்கான முக்கியத்துவம் தற்போது வலியுறுத்தப்பட்டு வந்தாலும், ஒருவர் தனது சூழலுக்கு ஏற்ப, பொருத்தமான ஒரு ஆலோசகரை தேர்வு செய்வது எப்படி என்பது, பொதுவாக தெரியவருவதில்லை.

உங்களின் தற்போதைய நிலைமை என்ன?

உங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பொறுத்தே, உங்களுக்கு எந்தவிதமான ஆலோசகர் தேவை என்பதை முடிவுசெய்ய முடியும். நீங்கள் இப்போதுதான் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ளீர்களா, இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளீர்களா, நீங்கள் தற்போது 20-25 வயதுக்குள் இருக்கிறீர்களா அல்லது தற்போதுதான் 30 வயதை தாண்டியுள்ளீர்களா மற்றும் இந்த நேரத்தில் உங்களின் தொழிலை மாற்ற விரும்புகிறீர்களா உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

புதிதாக கல்லூரிப் படிப்பை முடித்து, பணி வாய்ப்புகளை தேடும் ஒருவர், தனக்கான ஆலோசகரை தேடிக்கொள்வது எளிது. அதேசமயம், 20 வயதுகளின் மத்தியில் மற்றும் 30 வயதுகளின் ஆரம்பம் ஆகிய வயது நிலைகளில் உள்ளவர்கள், தங்களுடன் பணிபுரியும் மூத்த அனுபவஸ்தர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக, பெரும்பாலான நபர்கள், ஆலோசனை தருவதற்கு ஆர்வமாய் இருப்பார்கள். வெகு சிலரே, அதை ஒரு தொந்தரவாக நினைப்பார்கள். முதுநிலைப் படிப்பை முடித்தவர்கள், குறிப்பிட்ட தொழிலில் நல்ல அனுபவமும், தொடர்புகளும் உடைய பேராசிரியரை, தங்களின் ஆலோசகராக அமர்த்திக் கொள்ளலாம்.

கடைபிடிக்க வேண்டியவை

ஆலோசனைப் பெறும் ஒரு நபராக, நீங்கள் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பணிவு காட்டுதல் மிகவும் அவசியம். நீங்கள் எதைப்பற்றி கலந்துரையாட விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வேறு ஒரு நபரின் மூலமாக, உங்களின் ஆலோசகரிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அதைப்பற்றி தெரிவிக்கவும்.

நீங்கள், திட்டமிட்டபடி, உங்களின் ஆலோசகரை சந்திக்க செல்லும்போது, கண்டிப்பாக தாமதமாக செல்லக்கூடாது. ஏனெனில் அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். உங்களுக்கு, அங்கே செல்வதில் ஏதேனும் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டால், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட வேண்டும்.

ஆலோசகரை சந்திக்க செல்கையில், முறையான வகையில் உடையணிந்து செல்ல வேண்டும். சந்திப்பு முடிவடைந்த பின்னர், கைகளால் எழுதப்பட்ட "Thank you Note" ஒன்றை அனுப்புதல் சிறந்தது.

மறத்தல் கூடாது

பொதுவாக, ஒரு மாணவர், தனது ஆலோசகரிடமிருந்து, தேவையான விஷயங்களைப் பெற்றவுடன், அதன்பிறகான காலங்களில், அவருடனான தங்களின் தொடர்புகளை சுத்தமாக துண்டித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற செயல் ஏற்கத்தக்கதல்ல. உங்களின் வளர்ச்சி மற்றும் சறுக்கல்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது உங்களின் ஆலோசகருக்கு தெரியப்படுத்தி, அவரின் அறிவுரை மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது.

தெளிவாக இருங்கள்...

நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றி உங்களின் ஆலோசகரிடம் கலந்துரையாடப் போகிறீர்கள் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். படித்து முடித்ததும் என்ன செய்ய வேண்டும்? எந்த துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன? குறிப்பிட்ட லட்சியத்தை அடைவதற்கான படிநிலைகள் என்ன? தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம்.

எனவே, உங்களின் பிரச்சினை என்ன என்பதை மட்டும், உங்களின் ஆலோசகரிடம் நன்றாக விளக்கிவிட வேண்டும். தேவையின்றி உங்களின் குடும்பம் மற்றும் இதர விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். இதனால், உங்கள் ஆலோசகர் மற்றும் உங்களின் நேரம் தேவையின்றி வீணாகும்.

சூழலைப் பொறுத்து...

பொதுவாக, ஒரு ஆலோசகருடனான உங்களின் அணுகுமுறையானது, அவர் உங்களுக்கு, எந்தளவு அறிமுகமானவர் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள் அவரிடம் பேசும் தொனியும் அதைப் பொறுத்தே அமைகிறது. அதேசமயம், எது எப்படியாயினும், குறிப்பிட்ட எல்லைகளை மீறக்கூடாது. உங்களின் ஆலோசகருக்கு, சில முக்கிய விசேஷ நாட்களில், வாழ்த்துக்களை, தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் வெற்றிக்கு வழிகாட்டி