உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

நீட் தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்பிற்கு அதிகரித்த மவுசு!

நீட் தேர்வு பயத்தால், மருத்துவ படிப்பை காட்டிலும், இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதையே, இது காட்டுகிறது. விண்ணப்பித்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதில், மாணவர்களின் மதிப்பெண், தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகள் ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, இம்மாத இறுதியில், கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்த நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.

அவகாசம் நிறைவு :

இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல், துவங்கியது; மே, 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் பிரச்னையில், துாத்துக்குடியில் நடந்த கலவரத்தால், துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், சில நாட்கள் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், கவுன்சிலிங்கிற்கு

ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல், மாணவர்கள் திணறினர்.
எனவே, ஜூன், 2 வரை அவகாசம் வழங்கி, அண்ணா பல்கலை உத்தரவிட்டது. இந்த அவகாசம், நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:59 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பித்தவர்களின் பட்டியலை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று அறிவித்தார்.

இதன்படி, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, தொழிற்கல்வி பிரிவில், 2,249 மாணவர்கள் உட்பட, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் பதிவுக்கு, பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. எனினும், தங்களின் கணினி மற்றும், &'லேப் - டாப்&'களில் இருந்து, ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 321 மாணவர்களும், தமிழக அரசு அமைத்த, 42 கணினி உதவி மையங்கள் வாயிலாக, 12 ஆயிரத்து, 310 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, 2017ல், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதைவிட, இந்தாண்டில், 18 ஆயிரத்து, 554 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

மவுசு ஏன்?

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக, பரவலாக கூறப்பட்டாலும், இன்ஜி., படிப்பில் சேர, 2017ஐ விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது, இன்ஜி., கல்லுாரிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
இது குறித்து, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மட்டுமின்றி, &'ஆயுஷ்&' எனப்படும், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும், &'நீட்&' தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில், &'சீட்&' பெற முடியுமா என, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதனால், நுழைவு தேர்வு இல்லாத இன்ஜினியரிங் படிப்பில் எளிதாக சேர்ந்து விடலாம் என, பெரும்பாலான மாணவர்கள் நினைத்துள்ளனர். எனவே, 2017ஐ விட, 19 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

&'நீட்&' தேர்வு: நாளை, &'ரிசல்ட்&' :

தமிழகத்தில், ஒரு லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் எழுதிய, &'நீட்&' நுழைவு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், நீட் தரவரிசையை பின்பற்றியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது. இந்த தேர்வில், நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 1.07 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். அவர்களில், 24 ஆயிரம் பேர், தமிழில் எழுதினர். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழுடன் சேர்த்து, 11 மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வின், விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை, ஒரு வாரத்திற்கு முன், சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.

அதில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்து, விடைத்தாள் திருத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் வெளியாவதை தொடர்ந்து, வரும், 8ம் தேதிக்குள், நீட் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதேபோல், &'ஆயுஷ்&' என்ற இந்திய மருத்துவ படிப்புகளான, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கும், இந்த ஆண்டு முதல், நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்